Wednesday, 30 December 2015

இதுவும் கடந்து போகும்!

நாம் ஒன்று நினைக்க...அவன் ஒன்றை நடத்துகிறான்!
    2016-இல் ஆறு வயதை முடித்துக்கொண்டு ,அடுத்த வருடம் 2017-இல், எங்கள் பள்ளியை விட்டுப்போகபோகிறான் அந்த மாணவன் என நான் வருந்தாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவன் மேல் அன்பு வைத்திருந்தேன்!ஏனோ தெரியவில்லை அப்படி ஒரு அன்பு அந்த பையன்மேல்.4 வயதில் அந்த இரட்டையர்கள் பள்ளிக்கு வரும்போது,ஒன்றுமே அறியாமல் வந்தனர்.ஆனாலும் பெற்றோர்களின் நல்ல பழக்கவழக்கம்,நன்னெறிபண்புகள், அந்த மாணவர்களின் செயல்களை அனைவரும் விரும்பும்படி செய்தன.
        சக மாணவனுக்கு உதவி செய்வது,பகிர்ந்து சாப்பிடுவது, அழும் நண்பனை ஆறுதல் படுத்துவது என அனைவரையும் மிஞ்சி இருந்தான் இரட்டையரில் இளையவன்!ஆறு வயது சக மாணவனுக்கு,இவன் ஓடிப்போய் யூனிபார்ம் அணிய உதவுவான்.சாப்பாடு ஊட்டி விடுவான்.மதியிறுக்க மாணவனை ,எந்நேரமும் இவன் கையிலே பிடித்துக்கொண்டுதான் நடமாடுவான்.ஒரு தலமைத்துவ மாணவன் கிடைத்து விட்டான் என நான் கர்வம் கொள்வேன்.
       நாளுக்கு நாள் அந்த இளையவனின் செயல் என்னை அவன்பால் ஈர்த்துக்கொண்டது.எந்த இடத்தில் இருந்தாலும் அந்த பையனை நினைக்காமல் இருந்ததில்லை. வீட்டில் என் பிள்ளைகளுக்கும் அந்த பையனை நன்கு தெரியும்.அவனோடு விளையாடவே ,விடுமுறையில் என் மகன் என் பள்ளிக்கு வருவான்.2015 நவம்பர் பள்ளி முடியும் தருவாயில்,'அடுத்த வருடம் இந்த பையன் நம்மை விட்டுப்போய் விடுவானே?எப்படி அந்த பிரிவை ஏற்றுக்கொள்வோம்?என என்னை நான் கேட்டுக்கொள்வேன்!சதா அவனைப் பற்றியே என் ஆசிரியைகளிடம் பேசிக்கொண்டிருப்பேன்.
       ஆனால் சென்ற வாரம் அவனுடைய பெற்றோர்கள் கடையில் என்னைச் சந்தித்து 'டீச்சர் அடுத்த வருஷம் எங்கள் வேலை இடத்துக்கு அருகில் உள்ள அரசு பாலர் பள்ளியில் சேர்த்துவிட்டோம்.நான் வேலையை முடித்துக்கொண்டு ,உங்க பள்ளிக்கு வந்து அவனுங்களை எடுப்பதற்குள் ,லேட் ஆகுது,பாவம் !எனக்காக நீங்கள் காத்திருக்கிங்கள் டீச்ச்சர் 'என்று என் தலையில் கல்லைப்போட்டதுபோல் அந்த செய்தியைச் சொன்னார்கள் !என் பள்ளிக்கு அருகில் நகரத்தின் மைய நெடுஞ்சாலையான KESAS HIGHWAY இருப்பதனால் ,அங்கே வாகன நெரிசலும் ஒரு பெரிய பிரச்சனை என்பதுவும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம்.
       பணம் ஒரு பிரச்சனை என்றால் என்னால் உதவ முடியும்,ஆனால் அவர்கள் சொன்ன சில காரணங்கள் ஏற்புடையதாய் இருக்கவே ,மனமின்றி நானும் ஏற்றுகொண்டேன்.அடுத்த வருடம் அழுதுகொண்டே அவனை பிரிவதை விட இந்த வருடம் ஒரு சின்ன அதிர்ச்சியுடன் ,சீக்கிரமே அந்த பிரிவை ஏற்றுக்கொள்ள இறைவன் பணித்து விட்டான் என தோணியது!
       நாளை பிரிவோம்,அடுத்த நாள் பிரிவோம்,அடுத்த கணம் பிரிவோம் என நாம் நினத்துக்கொண்டிருக்கும்வேளையில் ,எந்த நிமிடமும் நமக்கு சொந்தமானவை அல்ல என உணரச் செய்ய வைத்த இந்த 2015 இறுதிநாளுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன் !
எப்படியெல்லாம் பற்றினை அறுக்கச்செய்கிறான்  பற்றற்றான் !
         #இருந்தாலும் மனம் எங்கோ ஒரு மூலையில் வலிக்கிறது!நாமும் சராசரி மனிதன் தானே?

Friday, 25 December 2015

திருவாதிரையில் கிட்டிய இறைச்சிந்தனை!

          சின்னப்பிள்ளையாக இருந்த காலங்களில்,(திருமணமாகும்வரை), என் அம்மா பெயர் தெரியாத ஒரு அயிட்டத்தைச் செய்து பசியாறையாக கொடுப்பார். உப்புமாவும் இந்த பெயர் தெரியாத அயிட்டமும் செய்தால் ,அன்னிக்கு முழுதும் அம்மா மேல் கோபம் வரும்.என் பக்கத்து வீட்டுத் தோழிகளும் உறவுகளும் அதை விரும்பி உண்பர்.அதைப்பார்த்தால் இன்னும் கோபம் கோபமாய் வரும்.
                                                               
         காரணம் அம்மா, அவர்கள் சாப்பிடும்போது’இந்த வீட்டு கழுதைகளுக்கு தெரியுமா கற்பூர வாசனை ‘எனவும் சொல்லுவாங்கள். வேறுவழியின்றி சாப்பிட்டு வந்த அந்த அயிட்டம்தான் ‘திருவாதிரை களி ‘என இன்று அதிகாலை ’ஆருத்ர தரிசனம்’ சென்ற போது தெரிந்து கொண்டதும் மெய் சிலிர்த்துப்போனேன்!திருவாதிரையன்று நடராஜருக்கு மிகவும் புனிதமான நிவேதனம் என்றும், மிக மிக சத்துள்ள உணவு என்றும் அங்கே உள்ளவர்கள் கூறியபோது ,எங்கள் மேல் அக்கறையுடன் செய்து,தெரிந்தோ தெரியாமலோ சிவபெருமானுக்கு உகந்த அமுதினை எங்களூக்கு சமைத்து கொடுத்த என் தாயார் (இன்றைய ஆருத்ர தரிசனம் காண ,தற்போது சிதம்பரம் சென்றுள்ள)அவர்களுக்கு ஒரு நன்றி சொல்ல தோணுச்சி!
                                                                         

       இப்படித்தான் பல செயல்களை(இறைசெயல்களை),சிறுபிள்ளைமுதல் தெரிந்தும் தெரியாமல் செய்தும்,பாமாலைகளை அர்த்தம் தெரியாமல் பாடியும் ,ஈசனின் கருணைக் கிடைக்கப்பெற்றிருக்கின்றோம்!தெரியாமல் செய்த செயலுக்கே இத்துனை அருள் கிடைக்கப்பெற்றிருந்தால், மணிவாசகர் வரிகளிள் பாடி இருப்பதுபோது போல ’சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து’ , எல்லாவற்றையும் உணர்ந்து,புரிந்து, செயல்பட்டால் கிடைக்கப்போகும் இறையருள் எத்தையக பேரின்பமாக இருக்குமோ? என மார்கழி திருவாதிரையான இன்று உணரச் செய்தான் ஆருத்ரன்.
                                                                     

Monday, 26 October 2015

சினிமா கதைப்போல ஆன குடும்பக்கதை!       சென்ற ஆண்டு பயின்ற மாணவன், எப்போதும் கட்டணத்தை தாமதமாகவே செலுத்துவான்.ஒருமுறை அவன் அம்மா பள்ளிக்கு வந்து 'சாரி டீச்சர்,அவன் அப்பா தற்போது இந்தோனேசிய சிறைச்சாலையில் செய்யாத குற்றத்திற்காக(???) தண்டனையை அனுபவித்து வருகிறார்.என்னுடைய வருமானம் மட்டுமே ஆகவேதான் கொஞ்சம் லேட்டாக கொடுக்கிறேன்'என்றார்.
        பிறகு தொடர்ந்தார் இவன் கருத்தரித்த நேரத்தில்தான் டிச்சர், அவர் சிறைக்குப்போனார்.இப்போ ஆறு வயசு ஆகிடுச்சி இன்னமும் போனில் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறான்,கூடியவிரைவில் அவர் வந்தால்தான் அவன் அப்பா முகத்தைப்பார்க்க போகிறான்'என்றார்.'பையனும் ஒவ்வொரு முறையும்அப்பாவோடு போனில் பேசிவிட்டு வந்து மகிழ்ச்சியாக பகிர்ந்துகொள்வான்.'அப்பா வரப்போகிறார் டீச்சர்'என்பான்.இந்த வருடம் ஆரம்பப்பள்ளிக்குப் போய்விட்டான்.

காலையில் தகவல் கிடைத்தது, அவன் அப்பா சிறையில் மாரடைப்பால் காலமானார் !
மரணம் இயற்கை ஆனால் பையனின் நிலையை நினைத்து மனம் அழுகிறது.

Sunday, 27 September 2015

என்னை ,நான் வெறுத்த நொடிகள்!      தமிழ்நாட்டில் இருந்து வீடு திரும்பியவுடன் கொஞ்சம் பிசியாக வேலைகள் செய்துகொண்டிருந்தேன்.எப்போதும் என் வீட்டுக்கு துணிகள் விற்க வரும் பாகிஸ்தானி ,கொஞ்ச காலமாக காணவில்லை.எப்போதும் வீட்டுக்கு வந்தால் ,கலகலப்பாக பேசுவான். என் கணவருடன் ரொம்ப குளோஸ் நட்பு.உரிமையோடு அக்கா ..அக்கா என அழைப்பான்.ரொம்ப மரியாதையாக பேசுவான்.திடிரென நேற்று என் வீட்டு முன் வந்து நின்றான்.’அக்கா ..அக்கா ‘என்றான்.நானும் வேலை பிசியால் உள்ளே இருந்துகொண்டு ’ஏன் என்ன விசயம் ?எனக்கு துணி எதுவும் வேண்டாம் ‘என்றேன்.அவனோ ’இல்லைக்கா உன்னைப்பார்க்கவேண்டும் ‘என்றான்.
       எட்டிப்பார்த்தேன்,கையில் துணி மூட்டைகள் எதுவுமில்லை.நான் ஏதும் காசு கொடுக்க வேண்டியிருக்கா?இருக்காதே..நான் துணிகள் வாங்கி ரொம்ப நாளாச்சே,ஏன் என்னைப் பார்க்கவேண்டும்? இப்படி யோசித்துக்கொண்டே ,’என்ன விசயம் நான் வேலையாக இருக்கேன்’ இன்னொரு நாளைக்கு வா ‘என கூறிகொண்டே வெளியே போனேன்.அவன் முகத்தில் மிகுந்த சோகம்.’அக்கா அன்னைக்கு வந்தேன்,உன் கணவர் நீ தமிழ்நாட்டுக்குப் போயிட்டேன்னு சொன்னார்.மீண்டும் இந்த தேதியில் வருவேன்னு சொன்னார் ,அதான் அக்கா வந்தேன்’என்றான்.
     ’எனக்கு துணி ஒன்னும் வேணாம்.நான் தமிழ்நாட்டில் எல்லா சாப்பிங்கும் செய்துட்டேன் ‘என்றேன்.’இல்லைக்கா நான் அதுக்கு வரவில்லை,அக்கா நானும் ஊருக்குப் போனேன்.என் அப்பா இறந்துபோயிட்டார் அக்கா.என்னால் இங்கே இருக்கமுடியவில்லை.நான் கிளம்பி போயிட்டேன்.நான் போவதுக்குள் காரியம் எல்லாம் முடிஞ்சது.ஒரு மாசம் இருந்துட்டேன்.இப்போதான் வந்தேன்.வந்து என்னால் இங்கே இருக்கவேமுடியவில்லைக்கா, ரொம்ப சோகமாக இருக்கு.என் கவலைகளை யாரிடமாவது சொல்லி அழனும் போல இருந்துச்சு.அதான் உன்னைத் தேடி வந்தேன்கா,நீயும் ஊருக்குப் போய் விட்டதாக உன் கணவர் சொன்னார்.அதான் மீண்டும் உன்னைப் பார்த்து சொல்லிவிட்டுப் போகலாம் என வந்தேன்’என்று கண்ணீர் மல்க கூறினார்.
      ஐயோ குடும்பத்தை விட்டு வந்து ,இப்படிப்பட்ட சோகம் எப்படி வாட்டும் என நமக்கும் தெரியுமே!’ச்சே ..ச்சே வருத்தப்படாதே, உள்ளே வா காப்பி ,டீ கலந்து கொடுக்கிறேன்..கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு போ ’என்றேன்.(அவன் அப்பா இறந்த செய்தியை விட மோசமான துன்பம் நான் போடும் காப்பி என நினைத்தானோ ???என்னவோ.) ரொம்ப பிடிவாதமாய் ‘எதுவும் வேண்டாம் அக்கா,நான் இன்னும் சில நாட்கள் கழிச்சி வாரேன்.உன்னிடம் சொல்ல வேண்டும் என மனசு சொன்னதால்தான் உன்னைத் தேடி வந்தேன் அக்கா. போயிட்டு வாரேன் ‘என விடைபெற்றான்.
       எந்த மனநிலையில் யார் வருகிறார்கள் என்று கூட புரிந்துகொள்ளாமல் கொஞ்சம் நேரம் அவனை உதாசினப்படுத்திவிட்டதை நினைத்து ரொம்ப வருந்தினேன்...வெட்கப்பட்டேன்.......இன்னமும்!

Saturday, 18 July 2015

இதுதான் மனித மனம்!

      சுமார் 10 வருடங்களாக ஒரு அழகான ஹேன்பேக் வைத்திருக்கிறேன்.அதில் சில பொருட்களை வைத்து அலமாரியின் மேல் வைத்திருப்பேன் ,தேவை ஏற்பட்டால் மட்டும் எடுத்துவிட்டு மீண்டும் அங்கே வைத்துவிடுவேன்.நேற்று மீண்டும் எடுத்து சில முக்கிய தஸ்தாவேஜுக்களை எடுத்து கீழேயே வைத்து ,பேக்கைத் துவைக்க எண்ணி சுத்தம் செய்தேன்.ஒரு பண உறை கிடந்தது.மலேசியாவில் ஏதும் பண்டிகை எண்டால்(ang pow) ,பண உறையில் பணம் வைத்துக் கொடுக்கும் சீனரின் கலாச்சாரம் இருக்குது.அதை மூவின மக்களும் பழக்கிவிட்டோம்.அதேப்போலத்தான் தீபாவளிக்கு தயார் செய்து வைத்த பண உறைதான் அது.

                அந்த பண உறைதான் கிடந்தது.ஆனால் கொஞ்சம் பழசாய் போய் கிடந்தததால்,நான் கண்டுகொள்ளவில்லை.மீண்டும் அறையைப் பெருக்கி குப்பைகளை சுத்தம் செய்தேன்.அந்த பண உறை என் காலில் மிதி பட்டது.எப்போதும் எல்லாவற்றையும் நன்கு பரிசோதனை செய்யும் நல்ல பழக்கம் என்னிடம் எப்போதும் உண்டு.ஆகவேதான் இதுவரையில் என் உடமைகளை நான் மிஸ் பண்ணியதோ ,தொலைத்ததோ கிடையாது என்றே சொல்லலாம்.

                  அதேப்போல அந்த பண உறையை வீசும் முன் உள்ளே ஏதும் இருக்காவென பார்த்தேன் ,கையில் நூறு வெள்ளி நோட்டு பட்டது.எப்போதோ யாரோ எனக்கோ ,என் பிள்ளைக்கோ கொடுத்தது என்று நினைக்கிறேன்.அடடா !வீசியிருந்தால்?மிகுந்த மகிழ்ச்ச்சியுடன் எடுத்து பிள்ளைகளிடம் காட்டினேன்.ஒரே சந்தோசம் ஆனால் அந்த மகிழ்ச்சி சிலநொடிகளில்  இன்னுமொரு கவலையைச் சேர்த்துக்கொண்டது!.ஆம்! இதுபோல எத்தனைப் பண உறைகளை வீசியிருப்பேன்?அதில் எவ்வளவு பணம் போனதோ? இப்படி கவனமில்லாமல் வீசியிருந்தால்?என்ற அச்சம் இன்னும் என்னை வாட்டுகிறது.கிடச்சதை வச்சி சந்தோசப்படாமல் ,இல்லாததை நினைத்து ஏங்கும் இதுதான் சராசரி மனித மனம்! மனித மனம் திருப்தியடைவே மாட்டேங்குது!!!

Sunday, 12 July 2015

சில வில்லங்கமும்...சில சிரிப்புகளும்!

              ஆபத்து அவரசமாக எதையாவது செய்யப்போய் ,அது வில்லங்கமாய்  முடியும் ஆனால் முடிவில் சிரிப்பாய் சிரிக்க வைக்கும்.அப்படி சின்ன சின்ன வில்லங்கத்தையும் ,வம்பை விலை கொடுத்து வாங்கியதையும்  கொஞ்சம் நினைத்துப்பார்த்துச் சிரித்தேன்!அந்த நிமிடத்தில் கோபம் வந்தாலும் ,நொடியில் சிரிப்பு எம்மை ஆட்கொண்ட அந்த தருணங்களை கொஞ்சம் பார்ப்போம்.

                ஒருமுறை நாங்கள் எல்லோரும் மாமாவுடன் காரில் வெளியே கிளம்பினோம். மாமா ,அவசர அவசரமாக  கிளம்பி வந்தவர் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு காரில் வந்து உட்கார்ந்தார்.ஒருவேளை காரை அக்காவிடம் ஒப்படைத்துவிட்டு ,அவர் பைக்கில் போகிறார் என நினைத்தோம் ,ஆனாலும் மாமா காரை ஸ்டார்ட் செய்தார்.’எதுக்கு ஹெல்மெட் ?என்று அக்கா கேட்க ,தலையைச் சொறிந்தவர்’ச்சே என்னமோ ஞாபகத்தில் போடுக்கிட்டு வந்துட்டேன் என சொல்ல ,அன்றைய நாள் முழுவதும் சிரிப்பாய் சிரித்தோம்.
               
                    காலையில் எழுந்து பலவேலைகளைப் பம்பரம்போல செய்வது, எங்கள் பெண் குலத்துக்கே (வேலைக்குப்போகும்)கிடைத்த சாபம்......வரம்!’நூறு இளைஞர்களைக் கொடுங்கள் ,நூறு நல்ல தலைவர்களை உருவாக்கிக் காட்டுகிறேன்’ என விவேகானந்தர் சொன்னதுபோல,அந்தக் காலை வேளையில் ’ஒரு பத்து நிமிடம் கொடுத்துப்பாருங்களேன்’ ,அம்புட்டு வேலைகளையும் ,சமையல்,கிளினிங்,அயனிங் என செய்து முடித்திடும் ஒரு அபூர்வ  சக்தி இருக்கும்.அம்புட்டு சுறுசுறுப்பாய் ஓடுவோம். அந்தப் பரபரப்பில் பல முறை அரிசியை களைந்து குக்கரில் போட்டு விட்டு ,பக்கத்தில் இருந்த கேத்தல் சுவிட்சை ஆன் செய்துவிட்டு , அரைமணி நேரம் கழித்து  எல்லா வேலைகளையும் முடித்து ,’என்னடா இன்னும் அரிசி வேகும் மணம் இல்லையே ?என எட்டிப்பார்த்தால்,ஆன் செய்யப்பட்டது வேற சுவிட்ச்?அந்த நாட்களெல்லாம்  மதியம் வந்துதான் சோறு சமைக்க முடிந்தது.பசி உயிரு போகும்.ச்சே என் புத்தியை என் ...............!

               டூத் பேஸ்ட்டும்,முகம் கழுவும் கிளின்சிங் கிரிம்  டியுப்பையும் ஒரே கூடையில் வைத்து டாய்லெட்டில் வைத்திருப்பேன்.எப்போதும் போல பரபரப்பாய் காலையில் கடமைகள் செய்வது வழக்கம்.ஒருமுறை காலையில் அவசர அவசரமாக ஓடிப்போய் ,பல் விலக்கும் தூரிகையில் கிளின்சிங் ஃபாம்-ஐயும் ,முகத்தில் டூத் பேஸ்ட்டையும் தடவி விட்டு ,ஏன் முகத்தில் ஒருமாதிரி இருக்குன்னு ,முகர்ந்து பார்த்தால்,அது டூத் பேஸ்ட்,நல்ல வேளையில் பல் தூரிகையை வாயில் திணிக்காமல் போனேனே.....!

               மாலில் ஷாப்பிங் செய்துட்டு,வேக வேகமாய் வந்து கார் சாவியைப்போட்டு காரைத் திறந்தேன்,திறக்கவே இல்லை.ஆத்திரத்தில் கொஞ்சம் ரஃப்ஃபா திறக்கப்போய் ,பக்கத்தில் வந்த ஓர் இளைஞன் ‘அக்கா என்ன அக்கா பிரச்சனை ?என்றான்.அப்பாடா உதவி செய்யத்தான் தம்பி வந்திருக்கான்னு ‘ரொம்ப நேரமா திறக்கிறேன் ,காரைத் திறக்க முடியல தம்பி’என்றேன்.’எப்படி முடியும்கா? நீங்கள் திறப்பது என் கார் அக்கா!’ஐயோ அப்படியா? திரும்பி கார் எண் பட்டையைப் பார்த்தேன்.ஒரே கலர் ,அதே ப்ராண்ட் கார் ஆனால் நம்பர் மட்டும் வேற!!’சாரி தம்பி ,நானும் இங்கே பார்க் பண்ணினேன் போல...என முடிப்பதற்குள்,அந்த பையனாக கொஞ்சம் நகர்ந்து போய்பார்த்தான்.

                    என் கார் கொஞ்சம் தள்ளி இருந்தது. ‘அக்கா நான் தூரத்தில் இருந்து பார்த்துட்டேன்,நீங்கள் என் கார் கிட்ட போய் கதைவைத் திறப்பதை.’இப்போவெல்லாம் திருட்டு வேலைகளைப் பெண்களை வைத்துதானே செய்யறானுங்க,அதான் நானும் கொஞ்சம் உஷாராகிட்டு உங்களை கவனிச்சேன்,ஆனால் உங்கள் செயலைக்கண்டு ,நீங்கள் திருட வந்த ஆள் இல்லை என்பதை புரிஞ்சிக்கிட்டுதான் கிட்டே வந்தேன் அக்கா. அதோ உங்கள் கார்’ என்றான் சிரித்துக்கொண்டே!அடக்கடவுளே என்னைப்பார்த்தால் திருடிபோலவா இருக்கு??அதுவும் ஆள் வச்சி திருடச் சொன்ன மாதிரியா இருக்கு?

                     எங்கள் சித்தப்பா மகன் மணி அண்ணன்.ஜோகூரில் இருந்து வீட்டுக்கு எப்போதாவது வரும்.அண்ணா வந்தால் வீட்டில் ராஜ மரியாதை.மூத்தப்பேரன் .அப்பாவின் தம்பி மகன். ரொம்ப பாசமான அண்ணா என பல தகுதிகள் பெற்ற அண்ணா. ஒருமுறை  அம்மா வீட்டுக்கு  வந்து, ,குளித்து முடிந்து வெளியே வந்த அண்ணா,’பாப்பா ,அது என்ன சோப்?நல்ல வாசம் ,சிகப்பு கலர்ல? ஜோகூரில் இந்த மாதிரி சோப் எல்லாம் கிடைக்காதும்மா.அம்மா எங்கே வாங்கினாங்க?என கேட்கும்போதுதான் எங்களுக்கு தெரிய வந்தது.....!

                    அண்ணா குளிச்சது நாய் குளிப்பாட்டும் சோப்.வீட்டில் நாங்கள் இருப்பதால் எங்களுக்கு எது குளிக்கும் சோப் ,நாய் குளிப்பாட்டும் சோப் என தெரியும்!ஆனால் பாவம் மணி அண்ணா.அம்மாவிடம் விசயம் போய் எங்களுக்கு அடி கிடைக்கும் முன் நானும் தங்கையும் அண்ணா கிட்ட மன்னிப்பு கேட்டு மீண்டும் குளிக்கச் சொன்னோம்!அன்றிலிருந்து மணி அண்ணாவின் பெயர் ’நாய் சோப் மணி அண்ணா’ என்று மாற்றம் கண்டது.

                    மிக மிக அண்மையில் ,வாட்ஸ் ஆப்பில் என்னைக் கோர்த்துவிட்டான் என் தம்பி.ஃபேமிலி பேக் என்ற குழுவில் சேர்த்துவிட்டான்.அதில் இரண்டு பிரிவு ,ஒன்று அப்பாவின் உறவு ,மற்றொன்று அம்மாவின் உறவு.இங்கே சொல்வதை சொல்லக்கூடாது.அங்கே சொல்வதை இங்கே சொல்லக்கூடாது என்ற ஒரு விதிமுறை உண்டு.(எல்லாம் புறணி பேசறதுதான்).நான் கோபம் வந்தால் ,பதற்றத்தில் எதையாச்சும் உளறி வைப்பேன்னு எனக்கு நல்லா தெரியும்.அதனால் நானே அந்த குழுவில் இருந்து வெளியானேன்.

                         இருந்தாலும் நாம இல்லாமல் நல்லா இருக்காதுன்னு மீண்டும் கோர்த்து விட்டான் தம்பி(இதில் என் அக்காவும் உடந்தை).விளைவு ?நானோ என் திருவாயால் ,அப்பா உறவுகளைப் பற்றி அப்பா ஃபேமிலி பேக்ல சொல்லப்போய்.........?எனக்காக என் உடன்பிறப்புகள் 7 பேர் மட்டும் அவர்களின் பிள்ளைகள் என எல்லோரும் எதை எதையோ  போட்டு 350 மேசேஜ்களைப் போட்டு ,நான் பேசியதை பழைய மேசேஜ்-ஆக மாற்ற எடுத்துக்கொண்ட முயற்சி இருக்கே?அதன் பிறகு  என் உடன்பிறப்புகளிடன் எனக்கு கிடச்ச துப்பு இருக்கே?

                    இதேப்போலத்தான் முகநூலில் (2011-இல்)ஒரு சம்பவம். இன்பாக்சில் நான் பிறரிடம் பேசுவது ரொம்பவே குறைவு. முகநூலுக்கு வந்த   புதிதில் நிறைய தப்புகள் செய்துள்ளேன்.இன்பாக்சில் அனுப்ப வேண்டிய சிலவற்றை தவறாய் வாலில் போட்டதுண்டு.என் நட்புக்கு அனுப்ப வேண்டிய மேசேஜை தவறாக ஒரு நண்பருக்கு அனுப்பி ,அந்த நண்பர் மெத்த மகிழ்ச்சியில் ‘எனக்கா டீச்சர் இப்படி அழகான வரிகள் போட்டு மேசேஜ் போட்டிருக்கிங்கள்?நீங்கள் என் கூட பேசக்கூட மாட்டிங்கள்?என் வாலுக்கு கூட வந்ததில்லையே?என்று கேட்கும்போதுதான் தெரிந்தது நான் தவறான நபருக்கு இன்பாக்ஸ் செய்தது.மன்னிக்கவும் அது  என் நட்புக்கு அனுப்பிய குட் மார்னிங் மேசேஜ்,பிளிஸ் இக்நோர்  என்று பதில் போட்டு மன்னிப்பும் கேட்டேன்.விளைவு அந்த சகோதரன் என்னை அன்பிரண்ட் பண்ணிட்டுப்போய்ட்டார்.

                (இப்படி நீங்கள் பல்பு வாங்கிய சம்பவம் உண்டா?)
                                                                  
Thursday, 4 June 2015

கலை என்பது யாதெனில்?

                                                                             
                பல்கலைக்கழகத்தில் இடுபணிக்காக ஓர் ஓவியத்தை ஏதாவது ஒரு டெக்டிக் பயன்படுத்தி(water colour) வர்ணம் தீட்டிக் கொண்டு வரச்சொன்னார் ப்ரொஃபெசர். நானும் சுமார் ஐந்து ஓவியத்தை பல விதமாக வர்ணங்களைக் கொட்டி செய்தேன்.ஆனால் எல்லா காகிதத்திலும் வாட்டர் கலர் தூரிகையிலிருந்து வழிந்து காகிதத்தில் சொட்டு சொட்டாக விழுந்தது.டென்சனில் எல்லாதையும் கசக்கி வீசினேன்.இறுதியாக செய்த ஒன்றிலும் அப்படியே விழுந்தது.ஆனால் நேரம் போதாமையால்  அதை எடுத்துக்கொண்டேன்.மனம் திருப்தியாகவே இல்லை.கலைக்கல்வி ,ஓவியம் எல்லாம் எனக்கு வராது என்பது மிகப்பெரிய உண்மை.(அண்மையில் அணில் வரையப்போய் அதை முயலா? குரங்கா?என என் மாணவர்கள் கேட்டதையும் மறைப்பதற்கில்லை!
              வகுப்பில் போய் அதை வெளியே எடுக்க (வெட்கப்பட்டு), எல்லோரும் கொடுத்தப்பிறகு கொடுத்தேன்.என் கலைக்கல்வி விரிவுரையாளர் ‘இது யார் செய்த வேலை?’என்றார்.'நான் தான் ப்ரோஃபெசர் ‘என்றேன் கொஞ்சம் தயக்கத்துடன் .உடனே அவர் ‘இங்கே என் கைகளில் இருக்கும் வேலையிலே இதுதான் மிகச்சிறந்த படைப்பு!’இதுவரை நீ செய்த கலைக்கல்வியில் நான் இதற்குதான்  அதிகமான புள்ளிகளைப்போடுவேன்’என்று கூறிக்கொண்டு என் வேலையை உயர்த்தி அனைவரிடமும் காட்டினார்.’i really had  affection on this work!’என்றார்.ஏதும் நம்மைக் கலாய்க்கிறாரோ என்று ‘இல்லை என்னால் முழுமையாக செய்ய...என்று நான் முடிப்பதற்குள் அவர்  ‘உன் இந்த கலையில் எத்தனை அர்த்தங்கள் உள்ளன தெரியுமா?
                         ’நீ வீசினாய் என்று சொன்ன அந்த காகிதங்களையும் ஏன் கொண்டு வரவில்லை ?முடிந்தால் அடுத்த வகுப்புக்கு அதைக்கொண்டு வர முடியுமா?எனக்கு அதில் எது சிறப்பாக படுகிறதோ அதை நான் பிற வகுப்புகளுக்கு உதாரண வேலையாக என் கோப்புகளில் வைத்துக்கொள்கிறேன்’என்றார்.        அதுமட்டுமல்ல அன்று நான்கு  மணி நேரமும் என் காகிதத்தைப் பல உதாரணங்களை காட்டி வகுப்பை நடத்தினர்.’உனக்கு அழகில்லை என்பது பிறருக்கு மிகச் சிறந்ததாய் தெரியும்,உனக்கு அழகு என்பது பிறருக்கு அசிங்கமாய் தெரியும்அதுதான் கலையின் ரகசியம்’என்றார்.
                       என் நினைவுக்கு வந்தது என்னவோ ‘காதலா காதலா ‘ திரைப்படத்தில் கமல் சொன்ன நகைசுவை மட்டுமே.’அது என்னங்க எங்க கண்ணுக்கு ஒன்னுமே தெரியலை,நீங்க என்னம்மோ ஆஹா ஓஹோன்னு சொல்றிங்களே!இன்னமும் எனக்கு நம்பமுடியவில்லை.கலைக்கல்வி நமக்கு வராது என்ற என் இத்தனை வருட எண்ணத்தை ,ஒரு நொடியில் தகர்த்தெறிந்த ஒவியமும்,அந்த விரிவுரையாளரைக் கவர்ந்த அந்த அழுக்கேறிய ஓவியமும் இதுதான்!