Tuesday 5 June 2012

ஏங்குதே மனம்...!

நினைக்கும்போதெல்லாம் !!!!
ஒரு சில விசயங்களை நினைத்தாலே நம்மை அறியாமல் விழிகள் பனிக்கும்.இதயம் கனக்கும்.கோடிக்கோடியாய் பணம் கொடுத்தாலும்,இப்போ பெறமுடியாது!திரும்பி வராது எதுக்கும்  ஈடு கட்டமுடியாத மகிழ்ச்சி ,அப்படிப்பட்ட சில விசயங்களை கொஞ்சம் திரும்பிபார்க்கிறேன்..

என் அப்பா
அன்புக்கு,கருணைக்கு,கொடுப்பதில் கர்ணன்,எதிரியைக்கூட வாழ்த்தும் நல்லெண்ணம் கொண்டவர்!ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்.இனி எந்த பிறவியில் அவரைப்பார்ப்பேனோ?அவரை நினைக்கும்போதெல்லாம்.....ஏங்குதே மனம்!
                                                                             

என் பாட்டி வீடு,
வருசம் 16 திரைப்படத்தில் வரும் ,தாத்தா வீடுபோலவே எனக்கும் அம்மா வழி பாட்டி வீடு இருந்தது.எங்களுக்கு விபரம் தெரிந்து நாங்கள் போய் அதிகம் தங்கிய பாட்டி வீடு அதுதான்.வெளியூரில் வேலை செய்யும் மாமாமார்கள்,தொலைத்தூரத்தில் கல்யாணம் கட்டிபோன சின்னம்மாமார்கள்,எங்கள் வயது ஒத்த சின்னம்மா பசங்க என எல்லோரும் திருவிழாவிற்கும்,தீபாவளிக்கும் ,ஓணம் பண்டிகைக்கும் நீண்ட பள்ளிவிடுமுறைக்கும் ஒன்று கூடுவது அங்கேதான்.நாங்கள் எங்களிடம் இருந்த ,மறந்திருந்த திறமைகளை (யாராவது பாராட்டுவாங்களேன்னு?)இரட்டிப்பாக காட்டுவதற்காகவே அங்கே போவோம்.பாட்டி உடல் நலம் இல்லாமல் போய்விட்டதால் ,மேலும் பராமறிக்க ஆள் இல்லாததால் ,அந்த வீட்டை தாய்மாமன்கள் விற்க முடிவு செய்தனர்.வீடு விற்கப்பட்டது!எல்லோரும் கவலையாக இருக்கு என்று சொல்லிவிட்டு சென்றனர்..ஆனால் நான் மட்டும் மனதில் அழுதேன்!இனி அதுபோல ஒரு வீடு என்று ........நினைக்கும்போதெல்லாம்.....ஏங்குதே மனம்!

என் கிராமத்து வீடு(2)
 வீடு (2)என்று குறிப்பிட காரணம் ,9 வயதுவரை ஒரு வீட்டில் இருந்தோம்.ரொம்ப மோசமான வீடு.மின்சாரம் இல்லை,கழிவறை வசதி இல்லை,ஈய வயலுக்கு அருகில்!ஆகவே அந்த வீட்டில் நிறைய சொல்வதற்கு இல்லை.9 வயதில் ஈயவயல் அருகே இருந்த வீட்டின் மணலிடிந்து ,எங்கள் வீடெல்லாம் பாதிக்கப்ப்பட்டதால் ,வேறு ஒரு தொடர் பலகை வீடுகள் கொண்ட கிராமத்துக்கு மாற்றலாகி சென்றோம்.அங்கேதான் நாங்கள் டீன் ஏஜ் தாண்டி ,வேலை ,வெளியுலகம் ,திருமணம் என படிப்படிப்பாய் வளர்ந்தோம்,படித்தோம் ,முன்னேறினோம்.கோழிகூவி பொழுது விடியும் கிராமம்.அக்கம்பக்கத்தில் சண்டை போட்டாலும் ,உள்ளூர ஏதோ சகோதரத்துவம் கொண்ட நண்பர்கள்!அப்பா வாழ்ந்து இறந்த வீடு ,எங்களுக்கு நிறைய சோகங்களையும் ,சந்தோசங்களையும் கொடுத்த அந்த வீட்டை நினைக்கும் போதெல்லாம்....ஏங்குதே மனம்!

கலர் டிவி
எங்கL கிராமத்தில் முதன்முதலாக எங்கள் வீட்டில்தான் கலர் டிவி வாங்கினோம் என்பதில் எங்களுக்கு பெருமை.ஆம்,நாங்க அந்த சமயம், வறுமைக்கும் வசதிக்கும் இடையில் வாழ்ந்த காலம்!என் அம்மா ரொம்ப திறமைசாலி பெண் ,மேலும் அதிர்ஷ்டக்கார மனைவியும் கூட, தொட்டதெல்லாம் பொன்னாகும் அவர் செய்யும் காரியம்.குருவி சேர்ப்பதுபோல,கொஞ்சம் கொஞ்சமாய் பணம் சேர்த்து நிறைய பொருட்கள் வாங்கி சேர்த்தார்.அந்த வரிசையில் வந்ததுதான் கலர் டிவி.எனக்கு இன்னும் நினைவிருக்கு,அந்த டிவி எங்கள் வீட்டை வந்தடைந்த அன்றிரவு  நாங்கள் பார்த்த முதல் படம் ,ஆங்கில படம் 'தி ஹை சாப்ரல்’(ரெட் இண்டியன்)(தமிழ்ப்படம் அன்று ஒளியேறவில்லை என்பதுதான் காரணம் அன்றி வேறொன்றுமில்லை).அன்றிரவு குதூகலத்தால்,நாங்கள் யாருமே எங்களுடைய  அறையில் உறங்காமல் ,வரவேற்பறையிலேயே உறங்கினோம் என்பது குறிப்பிடத்தக்கது.எங்களுக்கு வறுமையிலும்,வர்ணத்தில் உலகை காட்டிய அந்த கலர்(பலர் கைமாறி இறுதியாக பேரிச்சம் பழக்கடைக்கு சென்ற) டிவியை நினைக்கும்போதெல்லாம் ....ஏங்குதே மனம்!

கிராமத்து விளையாட்டுக்கள்
என் நண்பர்களோடு சேர்ந்து (ஒலிம்பிக்)விளையாட்டுக்களையே மிஞ்சும் அளவுக்கு ,நாங்கள் களைப்பே இல்லாமல் விளையாடிய கல்லாங்காய்,கிளிபறி,ஹை ஜம்ப்,நொண்டி விளையாட்டு,போலிஸ் திருடன்,எங்கிட்டே இருக்கு.பிடிக்கிற விளையாட்டு,ரவுண்ட்ரெஸ்(கிரிக்கெட்) .இன்னும் பல.வெள்ளிக்கிழமை எப்படா பள்ளி முடியும் ,மறுநாள் விடுமுறையாச்சே?.காத்துக்கிடந்து ,வீடு வந்து சேர்ந்ததும் ,சாப்பிட்டு மட்டும்(அதைத்தான் இன்னும் கூட ஒழுங்காய் செய்கிறோம்)சீருடைக்கூட மாற்றாமல் ,மாலை ஏழு மணி வரை விளையாடுவோம்.சட்டைக்கூட மாற்றாமல் ,ஏழு மணி வரைக் குளிக்காமல் ஆட்டம் போட்டதற்காக  அடி வாங்கியது இன்னுமொரு ரகசியம்.அந்த விளையாட்டெல்லாம் தற்பொழுது அடியோடு இல்லை என்று நினைக்கும்போதெல்லாம் ......ஏங்குதே மனம்!

55 எண் பேருந்து(12 பி )
பூச்சோங்கில் இருந்து பிரத்தியேகமாக கோலாலும்பூர் செல்லும் ஒரே பேருந்து இந்த 12 பி (55 பஸ்).கூட்ட நெரிசலில் சென்றாலும் ,அந்த சமயத்துல வெறும் 20 காசு மட்டுமே(தற்போதைய விலை 1.50 காசு) கொடுத்து ,பள்ளிக்குச் செல்வோம்.பஸ் வருவது கண்களுக்கு தென்பட்டால் ,ஏதோ பிரசவம் ஆனதுபோல மகிழ்ச்சி!அந்த சமயம் ,அந்த பேருந்தில் ,வேலை செய்த ஊழியர்கள் 90 சதவிகிதம் நம்ம ஆட்கள்.எனவே அவர்களின் முயற்சியால்  நாளடைவில் பேருந்தில் தமிழ்ப்பாடல்கள் ஒலியேற ஏற்பாடு செய்தனர்.ஐயோ அந்த நிமிடங்களை நினைத்தால் ,மனதில் பட்டாம்பூச்சி பறப்பதுபோல ஓர் உணர்வு.நமக்கு பிடித்த பாடல் ஒலியேறிக்கொண்டிருக்கையில் நாம் இறங்கும் இடம் வந்துவிட்டால் ,ஒளிந்து கொண்டு(டிக்கெட் இன்னும் விலை அதிகம் கேட்பாங்கன்னு)அடுத்த இடத்தில் போய் இறங்கிய காலங்களை நினைக்கும்போதெல்லாம்....ஏங்குதே மனம்!

புதன்கிழமை சந்தை
எங்கள் ஊரின் (பாண்டி பஜார்)என்றே கூறலாம். கோலாலும்பூர் நகரம் நகர்ந்து வந்து அங்கே ஒருநாள் கொட்டகையிடும் என்றும்  வைத்துக்கொள்ளலாம். ஏனென்றால் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து வியாபாரிகளும் அங்கே கூடுவர்.நாங்கள் டவுனுக்கு போய் ஷாப்பிங் செய்ததைவிட ,அந்த சந்தையில்தான் ஷாப்பிங் செய்தது அதிகம்.ஒன்று விலை குறைவு ,மற்றொன்று வீட்டிலிருந்து நடந்தே போகலாம்(யார் உதவியும் இல்லாமல்).அப்படி ஒரு கூட்டம்,விலைக்குறைவு!இன்னுமொரு விசேசம் ,அன்றைய தினம் சமையல் அப்பாவுக்கு மட்டுமே.நாங்கள் கண்டிப்பாக சந்தையில் திண்பண்டம் வாங்கியே சாப்பிட்டாகனும்(இல்லாவிட்டால் சீனன் கோபித்துக்கொள்வான் ??)அந்த மாதிரி சந்தைகள்,தற்பொழுது  நாங்கள் வசிக்கும் அபார்ட்மெண்ட் அருகே இல்லை என்று நினைக்கும்போதெல்லாம் ......ஏங்குதே மனம்

அம்மா வீட்டு தீபாவளி
இதுப்பற்றி நான் அடிக்கடி கூறியதுண்டு.எங்கள் கிராமத்தில் நூறு சதவிகிதம் தமிழர்களே.மேலும் தரவாட்டுக்குடும்பமாக வாழ்ந்த எங்கள்  வீட்டில் நாங்கள் கொண்டாடிய அந்த தீபாவளிப்போல நான் திருமணமாகி இன்னும் கொண்டாடியதே இல்லை என்பது மிகப்பெரிய உண்மை!விடிய விடிய பலகாரம் செய்வது,வீட்டை அலங்கரிப்பது ,சமையல் செய்வது ,ஆளுக்கொரு வேலையாக பகிர்ந்து ஆடிப்பாடி களைப்பின்றி கொண்டாடிய தீபாவளியை இன்றும்  நினைக்கும்போதெல்லாம் ......ஏங்குதே மனம்!

இரவு ஆப்பம்
அம்மாவின் கைவண்ணத்தில் வெகுவிரைவாக செய்யப்படும் ஒரு பலகாரம்!தோசை ,இட்லி என்றால், மாவு புளித்தே ஆகனும்.ஆனால் இந்த ஆப்பம்(அரிசி மற்றும் உளுந்து அதனுடன் தேங்காய்ப்பூ ,கருப்பு சீனி) கலந்து மாவு அரைத்தவுடனேயே சுட்டு சாப்பிடலாம்.இந்த பலகாரம் என்றால் (கருப்பு காப்பி)கலக்கி சாப்பிட்டால்தான் காம்பிநெசன் சிறக்கும் என்பது நான் கண்ட அனுபவம்.திருமணம் முடிந்து  ,பலமுறை முயற்சி செய்து ஆப்பம் குப்பைக்கு போனது மற்றொரு ரகசியம்.அம்மாவிடம் கேட்டால் ‘தின்ன மட்டும் செய்யுங்க,செஞ்சி பழகாதிங்கன்னு கணவர் பிள்ளைகள் முன் திட்டு கிடைக்கும் என்பதை மனதில் வைத்து ஆப்பத்தை நினைக்கும்போதெல்லாம்...ஏங்குதே மனம்.

ஏங்குதே மனம் .....ஏங்குதே மனம்.........படிக்கும் அனைவருக்கும் !!!!!



13 comments:

  1. அண்ணி...இந்தாங்க பெரிய பூச்செண்டு...செம ..செம...செம அண்ணி...செம லைவ்லி ஆ இருந்தது...உங்க கூடவே அந்த "வருஷம் பதினாறு" வீட்டில் போயி விளையாண்டு...புதன் கிழமை சந்தைக்கு போய்,அம்மாவோட இனிப்பு ஆப்பம் சாப்ட்டு...திவாளி கொண்டாடி...12b பஸ் ல போயிட்டு வந்து...ன்னு....எல்லாமே கூடவே பயணிக்கிற வர்ணனை...அண்ணி...ஏங்குதே மனம்...:-))

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஆனந்தி.உன் என்காரேஜ் என்னை மென்மேலும் எழுதவைக்குதுடி

      Delete
  2. //திருமணம் முடிந்து ,பலமுறை முயற்சி செய்து ஆப்பம் குப்பைக்கு போனது மற்றொரு ரகசியம்//

    அது மட்டும் தான் குப்பைக்கு போச்சா? ஹீ...ஹீ...;-))

    ReplyDelete
    Replies
    1. பல..பல....//அதெல்லாம் இங்கே பகிரக்கூடாதடி பெண்ணே!

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. //.ஆனால் இந்த ஆப்பம்(அரிசி மற்றும் உளுந்து அதனுடன் தேங்காய்ப்பூ ,கருப்பு சீனி) கலந்து மாவு அரைத்தவுடனேயே சுட்டு சாப்பிடலாம்.//

    அண்ணி...இதை ஆப்பம் னு சொல்ல மாட்டோம்...கருப்பட்டி அப்பம் னு சொல்வோம் எங்க ஊரில்....
    --

    ReplyDelete
    Replies
    1. நாங்கள் இதை ராத்திரி குவ்வே(மலாய் மொழியில் பலகாரம்னு அர்த்தம்)சொல்லுவோம் ஆனந்தி.

      Delete
  5. //மேலும் தரவாட்டுக்குடும்பமாக//

    அண்ணி...ப்ளீஸ் இதை தமிழில் மொழிபெயர்த்து சொல்லவும்;-)

    ReplyDelete
    Replies
    1. கூட்டுக்குடும்பம் ஆனந்தி!

      Delete
  6. வாழ்கையை பின்னோக்கி பின்னோக்கி பார்த்தால் பல விஷயங்களுக்காக ஏங்குதே மனம்.....!!!

    ReplyDelete
  7. //ரொம்ப மோசமான வீடு.மின்சாரம் இல்லை,கழிவறை வசதி இல்லை,ஈய வயலுக்கு அருகில்!ஆகவே அந்த வீட்டில் நிறைய சொல்வதற்கு இல்லை// எப்படி அதை மோசமான வீடு என்கிறாய். எவ்வளவு பெரிய வீடு அது. நான்கு பெரிய அறைகள். வீட்டும் கிச்சன்னும் ஒரே அளவில். கிச்சனிலேயே முப்பது பேர் அமர்ந்து சாப்பிடும் அளவிற்கு பெரிய சமையலறை. வரிசையாக சிமிண்டால் செய்யப்பட்ட நான்கு அடுப்புகள், அதற்குக்கீழே விறகுகள் அடுக்கிவைக்கின்ற காலியான கம்பாட்ம்ண்ட். வெளியே பெரிய நிலம், அதில் தாத்தா கொல்லை போடுவார். வெத்தலை, கத்தரிக்காய், அவரைக்காய், மல்லிக்கைப்பூ,வெண்டைக்காய் போன்ற தினசரி உபயோகத்திற்கு பஞ்சமில்லாமல் கிடைக்கும். பெரிய கோழிக் கொட்டகை, அதில் ஏறக்குறைய ஐம்பது கோழிகள் மற்றும் வான்கோழிகள் வளர்க்கப்பட்டது. அவைகள வியாபாரத்திற்கும் உணவிற்கும் உபயோகமாக இருந்தது. பக்கத்தில் ஒரு பெரிய கொய்யாமரம், பின் வழியாக வீட்டில் மேல் புறத்தில் ஏறி, தரக ஓட்டில் அமர்ந்துக்கொண்டு கொய்யாப்பழங்களை சாப்பிட்டதை மறக்கமுடியுமா!? கிடைக்குமா அந்த கொய்யாப்பழம் இப்போது!? தமிழ்நாடு சென்றிருந்த போது சாப்பிட்டோம். இங்கே???? அந்த கொய்யாமரத்தின் அருகில் ஒரு மாச்சாங்காய் மரம். இப்போது இருக்கா மாச்சாங்காய் மரம்? பார்ப்பாயா? வீட்டின் அருகில், கொல்லைக்கு இடையில் ஒரு இடம் இருக்கும், அங்கேதான் பலவிதமான விளையாட்டுகளை விளையாடுவோம். பெண்பிள்ளைகள் நாங்கள் அங்கே விளயாடும்போது, சாலையில் செல்பவர்களோ, பக்கத்து வீட்டுக்காரர்களோ பார்க்க முடியுமா நாம் விளையாடுவதை! அவ்வளவு அழகாக பார்த்துப்பார்த்து, பாதுகாப்பாக அப்பா கட்டிய அற்புதமான கூட்டுக்குடும்ப வீடு அது. என்ன, சீன லம்பத்தின் புறம்போக்கு நிலம்.வெள்ளம் மண்சரிவு போன்ற சிக்கல்கள் இருந்தது. மற்றபடி நாம் நிம்மதியாக வாழ்ந்து ஒரு பண்ணைவீடு அது. சூ பண்ணுவேன் உன்னை, அவ்வீட்டை நீ தப்பாக எழுதினால். கவனம்.

    ReplyDelete
  8. அடடா இதெய்ல்லாம் சொல்ல மறந்துட்டேனா??நன்றி அக்கா!நான் மோசம்னு சொல்ல வந்தது,மின்சாரமும் கழிவறையும் (இரண்டுமே முக்கியல்லவா?)அதை வைத்துதானே சொல்ல வந்தேன்.ஆனால் ரொம்ப அழகாக நம் கிராமாம் வீடு 1 பற்றி சொல்லிட்டே!நன்றி..நன்றி..நன்றி..

    ReplyDelete
  9. அட... அடா... அடே...

    ஏங்குதே மனம்... படிக்கப் படிக்க நாம வாழ்ந்து வந்த பாதைகள் மனசுக்குள் சம்மணமிட்டு மனசை ஏங்க வைத்துவிட்டது. அருமையான எழுத்து நடை. அப்பா அம்மா போட்டோ அழகு பாதுகாத்து வையுங்கள்.

    ReplyDelete