Thursday 7 June 2012

நேரில் நின்று பேசிய தெய்வம்

என் மற்றுமொரு தாயின்  பிறந்தநாள் இன்று(7/6/12)
                                                                           

என் அபார்ட்மெண்டில் குடியேறிய புதிதில்,ஒரு அம்மா எனக்கு அறிமுகம் ஆனார்.கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்த எனக்கு திருமணம் ஆனவுடன் தனிக்குடித்தனம் ரொம்ப கொடுமையான ஒன்றாகவே இருந்தது.என்னால் அந்த தனிக்குடித்தனம் ,தனிமை இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளமுடியாமல் சிரமப்பட்டேன்.இருப்பினும் அந்த வெறுப்பேற்றும் சூழலிலிருந்து தப்பிக்க ,என் வேலை எனக்கு கைவசம் இருந்தது.

 என் பையன் பிறந்தபொழுது ,எனக்கு என் வேலையை ராஜினாமா செய்தாகவேண்டிய சூழல்.VSS எடுத்துக்கொண்டு நிற்கலாம் என் அறிவித்தனர்.மகளும் நான்கு வயதை அடந்துவிட்டாள்.மகனைப் பராமறிக்க ஆள் பார்க்கனும் ,வருமானம் குறைந்த வாழ்க்கை ,இருப்பினும் வேலையை ராஜினாமா செய்தேன்.பிறகு முழுநேரம் வீட்டில் இருந்ததால் ,அந்த தனிமை என்னை சாகடிக்க தொடங்கியது.என் கண்வர் விருப்பப்படி நான் வேலையை விட்டுக்கொடுத்ததால் ,அந்த சமயங்களில் இன்னும் அதிகமாக அன்பு காட்டினார்(என் தனிமை என்னைக் கொன்றுகொண்டிருப்பதை .அவர் என் தாய் வீட்டிற்கு வரும்பொழ்தெல்லாம் உணர்வார்).’என்ன செய்ய எனக்கு மட்டும் ஆசையா ,கொஞ்சநாள் எல்லாம் சரியாகிவிடும்,பிள்ளைகள் வளர வளர தனிமையெல்லாம் தெரியாமல் போயிடும் என்று  என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாத ஆறுதல் எல்லாம் சொல்லுவார்(ஆண்களுக்கே உரிய சுயநலம்,அவர் மட்டும் விதிவிலக்கா?)

அந்த நேரம்தான், அந்த தத்துதாய் என்னோடு மிகவும் நெருங்க தொடங்கினார்.நான் கீழே(தரை வீடு,அவர் இருந்ததோ 5-ம் மாடியில்).குப்பைகள் வீச போகும்போது ,படி ஏறி இறங்குவதால் ,ரொம்ப களைப்பாக இருக்கும்மா,உன் வீட்டில் கொஞ்சம் உட்கார்ந்து போகிறேன் என்று அடிக்கடி வரப்போக ஆரம்பித்தார்.அறுவை சிகிச்சையில் பிரசவித்து ,சுமார் இருபது நாட்கள் கழித்து,என் அம்மா வீட்டிலிருந்து என் வீட்டுக்கு வந்ததால் ,அந்த அம்மா என்னை ரொம்ப அக்கறையுடன் கவனித்துக்கொள்வார்.தண்ணீரில் ரொம்ப நேரம் நின்று வேலை செய்யாதேம்மா,ஜன்னி வரும்னு அறிவுறுத்துவார்.சில நேரங்களில் ,அவராகவே எனக்கு நிறைய உதவி செய்வார்.கணவர் வேலைக்கு போய் விடுவார்,பிள்ளைகள் வீட்டில் இருப்பதால் ,என்னால் மார்க்கெட் போக முடியாது,ஆகவே தினமும் போனில் ;மார்க்கெட் போனால் எனக்கும் ஏதாவது வாங்கி வாருங்கள்’ என்று சொல்வேன்..

எங்களுக்குள் தாய் மகள் எனும் உறவு பூத்துக்குலுங்க ஆரம்பித்தது.கூட்டுக்குடும்ப வாழ்க்கையை மிஸ் பண்ணி தனிக்குடித்தனம் எனும் துயரத்தில் சிக்குண்ட நிமிடங்கள் , என் வேலையையும் ராஜினாமா செய்து ,தவித்துக்கொண்டிருந்த தருணம் அது,அந்த கசப்பான தருணங்கள் ரணமாகிய வேளையில்தான்,அந்த ரணத்துக்கு மருந்தாக அமைந்தது அந்த தாயின் நெருக்கம்.என் கண்வர் திரு.ஞானசேகரன் ,அந்த அம்மாவோ திருமதி.ஞானாம்பாள்.என் பிள்ளைகளுக்கு அப்பா வழி பாட்டி இல்லாததாலும் ,இந்த அம்மா ,நான்கு பேர் கொண்ட என் குடும்பத்தில் ஒருவராக ஆனதால் என் பிள்ளைகளுக்கு அப்பா பாட்டியானார்.ஒருமுறை வீட்டில் கேஸ் தீர்ந்து போய்விட்டது,வேலையை விட்டு வீட்டில் இருந்தபொழுது (இது முதல் அனுபவம்)செய்வதறியாது ,உடனே அவருக்கு போன் பண்ணி ‘அம்மா கேஸ் விநியோகம் செய்பவன் நம்பர் கொடுங்கம்மா,(அதெல்லாம் அப் டு டேட்டாக வச்சிருப்பாங்க)இன்னும் சமைக்கவில்லை ,கேஸ் தீர்ந்துபோச்சு என்று சொன்னேன்.’என்னாடி பொண்ணு நீ,பிள்ளைபெத்த உடம்பு ,இன்னுமா சாப்பிடவில்லை’ என்று திட்டிவிட்டு நம்பரும் கொடுத்தார்.

பிறகு அரைமணி நேரத்தில் ,என் வீட்டு முன்னால் ,டிபன் கேரியருடன் வந்து நின்றார்.இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.கேஸ்காரன் காலையிலே வந்து போயிட்டான்.இனி மாலையில்தான் வருவான்.இந்தா சாப்பிடு என்று என்னை உட்காரசொல்லி ,எனக்கும் என் மகளுக்கும் உணவு பறிமாறினார்.அந்த கணம் எனக்கு சொல்லவார்த்தையே இல்லை,அன்பு ..நேரில் நின்று பேசும் தெய்வம் இதுதானா??நான் காப்பி விரும்பி என்பதால்,மாலை வேளைகளில் நான் கேட்காமலேயே பலமுறை எனக்கு காப்பி சுடசுட கலந்து கொண்டு வருவார்.

என்னைப்பெற்ற தாயிடம் கூட காணாத அன்பு அது.என் அம்மா என் மேல் பாசம் பொழிவது ஆச்சர்யம் அல்ல ,காரணம் நான் அவர் மகள் இருந்தாலும் என் அம்மா ரொம்ப கண்டீசன் தாய்,தனிப்பட்ட முறையில் அன்பெல்லாம் இல்லை.ஆண்பிள்ளைகளை ரொம்ப கவனிப்பாங்க,பெண் பிள்ளைகள் என்றால் அன்பை காட்டி காட்டி (once in blue moon)எடுப்பார்.அப்படிப்பட்ட எனக்கு இந்த தாயின் அன்பு ,ஐயோ சொல்ல வார்த்தையில்லாமல் போனது.எனக்கு கார் ஓட்ட லைசென்ஸ் இருந்தது.ஆனால் கார் ஓட்ட பயம் .என் பயத்தை தெளிய வைத்த வழிகாட்டி.’எடுடி காரை.பிள்ளைகளை நான் பிடித்துக்கொள்கிறேன்,நீ காரை ஓட்டு என்று தைரியம் ஊட்டியவர்.இளவயதிலே கணவனை இழந்து ,மூன்று பிள்ளைகளை தனிமரமாக நின்று வளர்த்துவிட்ட தாய்.அவர் பிள்ளைகள் யாருமே இன்னும் திருமணம் ஆகவில்லை,ஆகவே என் பிள்ளைகள் அவருக்கு பேரப்பிள்ளைகளானார்கள்.தன் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு ,அவசர அவசரமாக வந்து ,என் பிள்ளைகளைப்பார்த்துக்கொள்வார்.நான் நிம்மதியாக என் வேலைகளை முடிப்பேன்.

அப்பேர்பட்ட அன்பு தாயிக்கு இன்று பிறந்தநாள்.இந்த பதிவு அவருக்கு ஒரு சமர்ப்பணம்.ஆம்,அந்த தாய் இன்று இவ்வுலகில் இல்லை.கருப்பை புற்று நோயினால் அவதியுற்று ,அவர் இறந்து மூன்று வருடம் ஆகிவிட்டன.இறக்க மூன்று நாட்களுக்கு முன் ,தன் மகளை அழைத்து செல்வியை மேலே வர சொல்,எனக்கு பார்க்கணும்போல இருக்குன்னு சொல்லியும் ,அந்த அக்கா ஏதோ டென்சனில் என்னிடம் சொல்லவே இல்லை.அம்மா இறந்தவுடந்தான் இந்த செய்தி என் காதுக்கு வந்தது.அவர் மகளை எப்படி திட்டுவது??இருந்தாலும் எனக்கு கொடுத்துவைத்தது அவ்வளவுதான் போல என்று மட்டுமே நினைக்க முடிந்தது.இன்று காலையில் எழுந்தவுடன் , யாருக்கோ இந்த தேதியில் பிறந்தநாள் என்று மண்டையைப்போட்டு உருட்டிக்கொண்டிருந்த வேளையில்..அந்த தாய் என்னைப்பார்த்து சிரிப்பதுபோல உணர்ந்தேன்.நினைவுக்கு வரவே இந்த பதிவும் ரெடியானது.அவர் படம் கைவசம் இல்லை.ஆனால் என் மனதிலும் என் பிள்ளைகள் மனதிலும் நிரம்பி இருக்கும் அன்பு தாயுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்!

3 comments:

  1. உங்க வீட்டுக்காரர் கூட திட்டுவார், அந்த பாட்டிக்கு நீ நிறைய செலவு செய்கிறாய் என்று.. அவரா? வீட்டில் உள்ள பொருட்கள் மிக விரைவாக தீர்ந்துப்போகிறதென்று, என்னிடம் போன் போட்டு அழுவார்.. அந்த பாட்டியா? ஓ.. (மூணு உல்லார்)

    ReplyDelete
    Replies
    1. ஐயோ இல்லவே இல்லை.இந்த அம்மா மேலே வீட்டில் இருந்தவங்க.நீ சொல்லும் பாட்டி,அவ்வப்போது தன் மகள் வீட்டில் வந்து தங்கி போவாங்க.அவுங்களும் என் அம்மாபோலதான்.

      Delete
  2. மக்களே இதிலிருந்து என்ன தெரிகிறது? இவர் பாட்டிகளையெல்லாம் திரட்டி,திண்ணையில் உட்கார்ந்து அரட்டை அடிக்கும் ஒரு பார்ட்டி.

    ReplyDelete