Saturday 7 February 2015

சரிதான்! ......பட்....ஆனால்?

             அண்மையில்  பல்கலைக்கழகத்தில் ஓர் இடுபணியைச் செய்ய அடியேன் பணிக்கப்பட்டேன். பிரபல மருத்துவரும் மழலைக்கல்வி ஆசிரியருமான அறிஞர் 'maria montessori' என்ற மருத்துவரைப்பற்றிய ஆய்வுதான் அது.                                                                              
                         
              மழலைக்கல்வி ஆசிரியர்களுக்கு, மரியா அவர்களைத் தெரியாமல் போக வாய்ப்பே இல்லை. ஆங்கிலத்தில் மிக அழகாக மழலைக்கல்வி என்பது ‘children not to taught but let them learn to learn’ என்று ஒரே வரியில் மிக ஆழமாக சொல்லிச் சென்றவர்.கற்றல் கற்பித்தலில்  பல புதிய யுக்திகளைக் கொண்டு வந்து சேர்ந்தவர். தெய்வக்குழைந்தகளான மாற்றுத்திறனாளிகளுக்கு முறையான கற்றல் கற்பித்தலை அறிமுகம் செய்தவர்.கற்றல் கற்பித்தலில் மாணவர்களுக்கு  சோர்வோ அல்லது சலிப்பு தட்டாமல் எவ்வாறு  கற்பிப்பது என பல நுணுக்கங்களை  அறிமுகப்படுத்தியவர். அவரைப்பற்றி ஆய்வுகள் செய்து ,நிறைய விசயங்களை இடுபணியில்  சேர்க்கவேண்டியதால், இணையத்தில் வலம் வந்தேன்.நிறைய பயனுள்ள தகவல்கள் கிடைத்தன.

         பல அறிஞர்களும் கல்விமான்களும் கூறிய கருத்துக்களை ,மரியா அவர்கள் கூறி இருந்தாலும் ,அவர் சொல்லிய இரண்டு விசயங்கள் என்னை பல கேள்விகளுக்கு ஆளாக்கின!ஒவ்வொரு மனிதனும் அவர்தம் பார்வையில் வெவ்வேறு மாற்றுக் கருத்தினைச் சொல்வது ஒன்றும் புதிதல்ல! பல்வகை   ஆசிரியர் பயிற்சிகளுக்குச் சென்றிருக்கேன்.அனைத்து பயிற்சிகளிலும் எங்களுக்கு வலியுறுத்தப்படும் விசயம் ,ஒரு மாணவனைப்பாராட்டுவதும் ,அவனுக்கு வெகுமதியாக குட்டி குட்டிப்பரிசுகளும் கொடுப்பது அவனை மென்மேலும் கல்விகேள்விகளில் ஈடுபடுத்திக்கொள்ள  ஓர் உந்துதலாக   இருக்கும்.ஆனால் இந்த கூற்றை ,மரியா அவர்கள் தவறு என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

                     சரி இது  ஒருபக்கம் இருக்க,மற்றொரு கூற்று நிஜமாக என்னை ஆச்சரியத்தில் வீழ்த்தியது.  அதாவது குழந்தைகளுக்கு 'fairy tales" கதை கூறுவதை தவிர்க்க வேண்டும் என்பதே ஆகும்! கதை என்பது கற்பனை உலகம் . கதை கூறுவதால் மாணவர்கள் குழப்பத்துக்கு ஆளாவார்கள்,அதுமட்டுமின்றி நிஜ உலகத்துக்கு தங்களைத் தயார் செய்ய சில தடைகளையும் எதிர்நோக்குவர் என்றும் அவர் கூறியுள்ளார்.பாலர்பள்ளியில் கடந்த பத்து வருட அனுபவத்தில் மாணவர்களுக்கு கதை கூறுவது அடியேனின் தலையாய கடமை.என் மகளுக்கு சுமார் 12 வயது வரை கதை சொல்லித்தான் தூங்க வைப்பேன்.அதை நான் மிகவும் விரும்பி செய்வேன்.
                                                                          
                  ஒவ்வொரு முறையும் கதையைக்கூறிவிட்டு ,அதை முடிக்காமல் ‘சரி மாணவர்களே நாளை வகுப்புக்கு அவசியம் வாங்க,அப்போதான் சிங்கம் நரியைக் கொன்றதா இல்லையா ?காகத்தின் வடையை நரி தின்றதா அல்லது கெட்டிக்கார காகம் எவ்வாறு வடையை கீழே விழாமல் காத்துக்கொண்டது?என்று சொல்வேன்’என பாதியில் நிறுத்தினால் ,நாளை அவன் ஆர்வமாய் பள்ளிக்கு வருவான் என்ற டிப்ஸ் எங்களுக்கு பயிற்சியில் அடிக்கடி  கொடுக்கப்படும்.அப்படி கதையைப் பாதியில் நிறுத்தினால் அந்த மாணவனின் முகத்தில் ஒரு மாற்றமும் ஆர்வமும் தென்படும்.குழந்தைகளுக்கு கதை கூறுவதால் ,அவர்களின் கற்பனா சக்தி வளரும்.அவனுள் ஓர் ஆற்றல் உருவாகும்.அதுதான் அவனை ஒரு படைப்பாளியாக உருவாக்க ஓர் ஊன்றுகோல் என்றே எங்களுக்கு பயிற்சிகளில் கற்பிக்கப்பட்டது.


                      ஆகவேதான் முன்பெல்லாம் பாட்டிதாத்தாவிடம் வளர்ந்த குழைந்தகள் கதை கதைகேட்டு படைப்பாளிகளாக உருவாகினர் என்றும் கூறுவர்.  தமிழிலும் சரி,ஆங்கிலத்தில்  bed time story,old fairy tales என்று புத்தகங்களே உண்டு. ஆனால் அது தவறு என்று மரியா அவர்களின் கூறியதை முதலில் நான் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும்,பிறகு கொஞ்சம் பின்னோக்கி பார்த்தபொழுது ,சிலகோணங்களில் சரியாகத்தான் படுகிறது என்பதை உணர்ந்தேன்.

                    ‘மூன்றாம் பிறை’என்ற படத்தைப் பார்த்த நான் பயங்கர மன உளைச்சலுக்கு ஆளானேன்.ஏன் பாலுமகேந்திரா கமலை மீண்டும் குணமாக்கி ஸ்ரீதேவிக்கு மணமுடிக்கவில்லை?அந்த படம் பாகம் 2 வருமா?அதிலாவது திருப்புமுனை வருமா?என்றெல்லாம் என்னுள் பல கேள்விகள்! ரஜினிகாந்த நடித்த ஆறிலிருந்து அறுபது வரை படம் பார்க்கும்போது படாபட் இறந்தவுடன் ,படம் பார்க்கும் ஆர்வம் போனது.சரி எப்படியும் ரஜினி மீண்டு வருவார் என்று பெரிய எதிர்ப்பார்ப்புடன் பார்த்தால் ரஜினியை இயக்குனர் கொன்றேவிடுகிறார்.

             அந்த வயதுகளில்தான் தாக்கம் ஏற்படும் என்று நினைத்தால் ,‘அஞ்சலி’படத்தில் அஞ்சலி பாப்பா இறந்துபோய்விடும்.நாயகன் படத்தில் மணிரத்தினம் சார் கமலை ஏன் சாகடிக்கணும்?ஐயோ கமல் இறந்துவிட்டாரே !என்று அழுதது மற்றுமொரு ரகசியம்.மூன்று முடிச்சி படத்தில் ஸ்ரீதேவியை ரஜினியின் அப்பா திருமணம் செய்துகொள்ளும்போது ரஜினியைவிட எனக்கு ,அந்த வயதில் அப்படி ஒரு கோபம்! சுஜாதா காதலித்த விஜயகுமாரை கே.பி ,அவர் தங்கைக்குத் திருமணம் செய்து வைத்து ,சுஜாதா மீண்டும் வேலைக்குச் செல்லும் ‘அவள் ஒரு தொடர்கதை’இன்று பார்த்தாலும் என் அழுகை ஒரு தொடர்கதையாக இருக்கும் என்பதுதான் உண்மை! 

                  இன்றுவரை வில்லன் கதாநாயகனிடம் அடிவாங்கும்போது என் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்கும் என்பது மறுக்கமுடியாத கூற்று.’பாட்சா’திரைப்படத்தில் வில்லனை ரஜினி கம்பத்தில் கட்டி துவைச்சி எடுக்கும் காட்சியை நான் பலமுறை ரிவைன் பண்ணி பார்த்து மகிழ்ந்ததுண்டு.எனக்கு ஏதேனும் அந்த ‘ஃபியா’ இந்த ‘பியா’ நோய் என்று பட்டம் கட்டிவிடாதீர்கள் நட்புக்களே.ஐ அம் ஓகே!.அட ஏன் அவ்வளவு பின்னோக்கி போவானேன்? நேத்து பார்த்த ’ஐ’ படத்தில் ,ஷங்கர் சார் ,விக்ரமை ஒரு கூனனாக காட்டி படத்தை முடிச்சிடுவாரோ ?என நான் பயந்து பயந்து படம் முடியும்வேளையில் விக்ரம் ,பழைய தோற்றத்தில் உருமாறி வந்த பிறகுதான்  மனதிருப்தியோடு நான் தியேட்டரைவிட்டு வெளியேறினேன்.
                    
                      அப்படி ஒரு மன உளைச்சல்களுக்கு கதைகளும் சினிமாக்களும் நம்மை இட்டுச்செல்லும் என்பதில் (என் விசயத்தில்)ஐயமே இல்லை. இப்படி ஏழுகழுதை வயசான நமக்கே(ஒரு கழுதைக்கு எத்தனை வயசு என்று தெரியாது என்ற தகிரியத்தில்தான் அப்படி சொல்கிறேன்!!) ,மிகப்பெரிய பாதிப்பைக் கதைகள் கொடுத்துச் சென்றால்?பிஞ்சுகளின் மனதில் எப்படியெல்லாம் தாக்கம் ஏற்படும்?அறிஞர்கள் அறிந்துதான் சொல்வார்கள் அதனால்தான் அவர்கள் ‘அறிஞர்கள்’!
                                     மரியா அவர்களின் கூற்று சரியா? தப்பா ?

                                                     

               

   
                                                         

2 comments:

  1. Thank's WIKIPEDIA.........../////. Working donkeys in the poorest countries have a life expectancy of 12 to 15 years;[14] in more prosperous countries, they may have a lifespan of 30 to 50 years.[5]////நல்ல பகிர்வு டீச்சர்!நன்றி.

    ReplyDelete
  2. மிகவும் நல்ல பகிர்வு...
    வில்லனை ஹீரோ அடிக்கும் போது சந்தோஷமாத்தானே இருக்கு....
    வாழ்த்துக்கள் பகிர்வுக்கு.

    ReplyDelete