Wednesday 25 February 2015

நமக்கும் கீழே உள்ளவர் கோடி!

              மகளின் தேர்வு முடிவு வந்து ,அவள் நினைத்த துறையில் (அக்கெளண்ட்ஸ்)கிடைக்கவில்லை என ரொம்ப அப்செட் ஆகினாள்.படிப்பு ஒருபுறம் என்றாலும் ,தோழிகள் எல்லாம் அந்த வகுப்பில் இருக்காங்களே?என்ற கவலைதான் அவளுக்கு.சரி மறுபடியும் முறையீடு செய்யுங்கள் என பள்ளி தெரிவித்தது.ஆனால் அதில் சில  இன வாரியாக அரசியல் இருக்கத்தான் செய்யுது என் பல பெற்றோர்கள் அலட்டிக்கொண்டனர்.என் நெருங்கிய நண்பன் ஒருவனும் ,என் மாணவனின் தாயாரும் இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள் என்பதால் அவர்களிடம் விவரம் கேட்டேன்.

            இருவருமே சொன்ன விசயம்,’எல்லாத்துறையிலும் தற்போது வேலை வாய்ப்பு அதிகம்,அதிலும் வணிகத்துறைக்கு எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன,அதிலேயே இருக்கச் சொல்லுங்கள்’என்று.
சரி ஒரு முறை நானே போய் பள்ளியில் பேசலாம் என முடிவெடுத்துச் சென்றேன்.கொஞ்சம் கவலையும் இருந்தது ,நம் ஆசைகள்தான் பல நிறைவேறாமல் போனது .அவளுடைய ஆசைக்காக முயற்சியை முன் வைப்போமென பள்ளிக்கூடம் சென்றேன்.சுமார் ஒருமணி நேரம் கழித்து ,துணைத்தலமையாசிரியர் வந்தார்.அவர் ஒரு மலாய்க்கார ustadz . ரொம்ப மென்மையாக பேசினார். அதிலும் ரொம்ப மரியாதை கொடுத்துப் பேசினார்.

            பொதுவாக சில  பள்ளிக்கூடத்தில் அந்த மரியாதையை எதிர்ப்பார்ப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.ஆகவே நானும் அவர் பேச்சை அமைதியாக கேட்டேன்.நிறைய நல்ல விசயங்களையும் தெளிவு படுத்தினார்.’அவள் தற்போது இருக்கும் வகுப்பில் என்ன பிரச்சனை?அந்த வகுப்புக்கே பல மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் ,அவள் ஏன் நிராகரிக்கிறாள்? என்றும் கேட்டார்.நீங்களும்  ஓர் ஆசிரியைதானே? நீங்கள்  கடந்து வந்த விசயங்களைக் கூறி அவளுக்கு புரிய வைக்கலாம் எனவும் கூறினார். இறுதியில் அவர் சொன்னது ‘அந்த வகுப்பில் மாணவர்கள் அதிகம் ,ஆகவே யாரேனும் மாற்றலாகி போனால் ,வாய்ப்பு கிடைக்கும் ‘ஆனாலும் ,நம்பிக்கை வைக்காதீர்கள்’என்றார்.கிடைக்குமா என்பது கேள்விக்குறி என்றாலும் என் முயற்சியை முன் வைத்த திருப்தியில் காரை ஓட்டினேன்.

                  லேசாக மன பாரம் குறைந்தது போல இருந்தது.சாலையில் போய்க்கொண்டிருக்கும் போது ,என் காரைக் கடந்து மற்றுமொரு கார் சென்றது.நன்கு பழக்கமான காரைப்போல இருக்கவே எட்டிப்பார்த்தேன்.எனது அருமை நண்பரும் ,பள்ளியின் துணைச் செயலாளருமான திரு.சுப்பையா அவருடைய  கார் அது. அவர் என்னை கவனிக்கவில்லை. தனது மூத்த மகனை அவன்  ஆசைப்பட்டபடியே வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்தார்.சுமார் மூன்று லட்சம் செலவு செய்தார்.பையன் மிகச் சிறந்த முறையில் கல்வியை முடித்துக்கொண்டு நாடு திரும்பி,மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை,கே.எல்.ஐ. அருகே மோட்டார் விபத்தில் சிக்கி அங்கேயே அகால மரணமடைந்தான்.

                     மகளுக்கு நினைத்த வகுப்பு கிடைக்கவில்லையே என மனசு பாரமாய் இருந்தது,ஆனால் அவர் ,மகனின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றிய நிலையில் அந்த மகனையே தற்போது  இழந்து இன்னும் மீளாத்துயரில் இருக்கிறாரே?அந்த கவலைக்கு ஈடாக இவ்வுலகில் ஏது துயரம்? அந்தக் காரை, அந்த நேரத்தில் எனக்கு காட்டி ஏதோ ஒரு மேசேஜ் காதில் சொல்வது போல ஓர் உணர்வு.... தலையில் யாரோ ‘படார்’என அடித்து ,உனக்கும் கீழே உள்ளவர்கள் பல கோடி ,உனக்கும் எனக்கும் வருவதுதான் துயரமா?என்ற கண்ணதாசனின் வரிகளை நினைவுபடுத்தியபோல இருந்தது!கணத்தில் மனதில் இருந்த கொஞ்ச நஞ்ச கவலைகளும் பாரமும் எங்கோ போயின!
                                                                   

2 comments:

  1. நமக்கும் கீழே உள்ளவர் கோடி..... சரிதான்.

    அனுபவப் பகிர்வு நன்று.

    ReplyDelete
  2. அனுபவப் பகிர்வு அருமை.

    ReplyDelete