Wednesday 30 December 2015

இதுவும் கடந்து போகும்!

நாம் ஒன்று நினைக்க...அவன் ஒன்றை நடத்துகிறான்!
    2016-இல் ஆறு வயதை முடித்துக்கொண்டு ,அடுத்த வருடம் 2017-இல், எங்கள் பள்ளியை விட்டுப்போகபோகிறான் அந்த மாணவன் என நான் வருந்தாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவன் மேல் அன்பு வைத்திருந்தேன்!ஏனோ தெரியவில்லை அப்படி ஒரு அன்பு அந்த பையன்மேல்.4 வயதில் அந்த இரட்டையர்கள் பள்ளிக்கு வரும்போது,ஒன்றுமே அறியாமல் வந்தனர்.ஆனாலும் பெற்றோர்களின் நல்ல பழக்கவழக்கம்,நன்னெறிபண்புகள், அந்த மாணவர்களின் செயல்களை அனைவரும் விரும்பும்படி செய்தன.
        சக மாணவனுக்கு உதவி செய்வது,பகிர்ந்து சாப்பிடுவது, அழும் நண்பனை ஆறுதல் படுத்துவது என அனைவரையும் மிஞ்சி இருந்தான் இரட்டையரில் இளையவன்!ஆறு வயது சக மாணவனுக்கு,இவன் ஓடிப்போய் யூனிபார்ம் அணிய உதவுவான்.சாப்பாடு ஊட்டி விடுவான்.மதியிறுக்க மாணவனை ,எந்நேரமும் இவன் கையிலே பிடித்துக்கொண்டுதான் நடமாடுவான்.ஒரு தலமைத்துவ மாணவன் கிடைத்து விட்டான் என நான் கர்வம் கொள்வேன்.
       நாளுக்கு நாள் அந்த இளையவனின் செயல் என்னை அவன்பால் ஈர்த்துக்கொண்டது.எந்த இடத்தில் இருந்தாலும் அந்த பையனை நினைக்காமல் இருந்ததில்லை. வீட்டில் என் பிள்ளைகளுக்கும் அந்த பையனை நன்கு தெரியும்.அவனோடு விளையாடவே ,விடுமுறையில் என் மகன் என் பள்ளிக்கு வருவான்.2015 நவம்பர் பள்ளி முடியும் தருவாயில்,'அடுத்த வருடம் இந்த பையன் நம்மை விட்டுப்போய் விடுவானே?எப்படி அந்த பிரிவை ஏற்றுக்கொள்வோம்?என என்னை நான் கேட்டுக்கொள்வேன்!சதா அவனைப் பற்றியே என் ஆசிரியைகளிடம் பேசிக்கொண்டிருப்பேன்.
       ஆனால் சென்ற வாரம் அவனுடைய பெற்றோர்கள் கடையில் என்னைச் சந்தித்து 'டீச்சர் அடுத்த வருஷம் எங்கள் வேலை இடத்துக்கு அருகில் உள்ள அரசு பாலர் பள்ளியில் சேர்த்துவிட்டோம்.நான் வேலையை முடித்துக்கொண்டு ,உங்க பள்ளிக்கு வந்து அவனுங்களை எடுப்பதற்குள் ,லேட் ஆகுது,பாவம் !எனக்காக நீங்கள் காத்திருக்கிங்கள் டீச்ச்சர் 'என்று என் தலையில் கல்லைப்போட்டதுபோல் அந்த செய்தியைச் சொன்னார்கள் !என் பள்ளிக்கு அருகில் நகரத்தின் மைய நெடுஞ்சாலையான KESAS HIGHWAY இருப்பதனால் ,அங்கே வாகன நெரிசலும் ஒரு பெரிய பிரச்சனை என்பதுவும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம்.
       பணம் ஒரு பிரச்சனை என்றால் என்னால் உதவ முடியும்,ஆனால் அவர்கள் சொன்ன சில காரணங்கள் ஏற்புடையதாய் இருக்கவே ,மனமின்றி நானும் ஏற்றுகொண்டேன்.அடுத்த வருடம் அழுதுகொண்டே அவனை பிரிவதை விட இந்த வருடம் ஒரு சின்ன அதிர்ச்சியுடன் ,சீக்கிரமே அந்த பிரிவை ஏற்றுக்கொள்ள இறைவன் பணித்து விட்டான் என தோணியது!
       நாளை பிரிவோம்,அடுத்த நாள் பிரிவோம்,அடுத்த கணம் பிரிவோம் என நாம் நினத்துக்கொண்டிருக்கும்வேளையில் ,எந்த நிமிடமும் நமக்கு சொந்தமானவை அல்ல என உணரச் செய்ய வைத்த இந்த 2015 இறுதிநாளுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன் !
எப்படியெல்லாம் பற்றினை அறுக்கச்செய்கிறான்  பற்றற்றான் !
         #இருந்தாலும் மனம் எங்கோ ஒரு மூலையில் வலிக்கிறது!நாமும் சராசரி மனிதன் தானே?

1 comment:


  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete